

‘தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் - 2030’ எனும் 5 ஆண்டு திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னையில் முன்னணி தொழில், கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு, பரிசோதனை மையம் உருவாக்கப்படும். பொறியியல், வார்ப்பக தொழிலில் சிறந்து விளங்கும் கோவை மண்டலத்தில் கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். இவற்றை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தைவான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும். ஓசூரில் 5 லட்சம் சதுரஅடி பரப்பில் உயர்தர அலுவலக வசதிகளை கொண்டு ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா, விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா உருவாக்கப்படும்.
ஓசூரை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும். கடலூர், மதுரை மாவட்டம் மேலூரில் காலணி தொழி்ல் பூங்காக்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சியில் சிப்காட் நிறுவனம் மூலம் காலணி திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். திருச்சியில் 250 ஏக்கர் பரப்பில் பொறியியல், வார்ப்பக தொழில் பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கை இழை, தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படும். கடலூரில் 500 ஏக்கரிலும், புதுக்கோட்டையில் 200 ஏக்கரிலும் புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் தொழில் துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.131 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பெருமளவில் உருவாகி வரும் புதிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் சென்னையில் ‘AVGC-XR’ எனப்படும் திறன்மிகு மையம் ரூ.50 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. இதன் துணை மையங்கள் கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை மண்டலங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் மற்றும் ஐடிஎன்டி மையங்களில் பதிவுசெய்து செயல் பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்கள் எளிதில் தரவு மைய சேவைகளை பெறும் வகையில் ரூ.10 கோடியில் தமிழ்நாடு புத்தொழில் தரவு மைய சேவைத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் புத்தொழில் நிறுவனங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தரவு மைய சேவைகளுக்கான வில்லைகளை (வவுச்சர்ஸ்) பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.