

அதிமுகவில் உறுப்பினர் அட்டைகளை உரியவர்களிடம் வழங் காமல் சில நிர்வாகிகள் தாங்களே வைத்திருப்பதாக தொண்டர்கள் புகார் கூறுகின்றனர். அதிமுக உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப் பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற் குமான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி வரை பெறப்பட்டன.
அதில், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் கொடுத்து ரசீது பெற்றவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பணம் செலுத்தி மனு செய்தும் தங்களுக்கு உறுப்பினர் அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்று பலர் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து திருநெல்வேலி புறநகர் மாவட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
எங்கள் பகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் உறுப் பினர் பதிவு விண்ணப்பம் கொடுத்து அனுப்புகிறோம். அதற்கான ரசீதுகளை அந்த நிர்வாகிகளே வைத்துக் கொள்கின்றனர். இதனால், விரைவில் உட்கட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் உறுப்பினர் அட்டைகளை பெறமுடியவில்லை என்றனர்.
இதுதவிர அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினர் அட்டை பெற்றுள்ள சுமார் 1.5 லட்சம் பேர், கட்சித் தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளதா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, ‘‘ஒரு சில இடங்களில் இப்படி நடப்பது வழக்கம்தான். தவறு செய்யும் நிர்வாகிகள் மீது பொதுச் செயலாளர் கடும் நடவடிக்கை எடுப்பார். ஆன்லைன் அட்டைகள் வைத்திருந்தால் கட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம்’’ என்றனர்.