Last Updated : 14 Mar, 2025 04:22 PM

 

Published : 14 Mar 2025 04:22 PM
Last Updated : 14 Mar 2025 04:22 PM

உடுமலையில் பராமரிப்பு இல்லாத கட்டிடத்தில் அம்மா மருந்தகம்!

உடுமலை சித்திரக்கூடம் பகுதியில் செயல்படும் அம்மா மருந்தக முகப்பு தோற்றம்.

உடுமலை: உடுமலையில் பராமரிப்பில்லாத நகராட்சி கட்டிடத்தில் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடந்த 2014-ம் ஆண்டு அம்மா மருந்தகங்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்த மருந்தகங்களில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதால், ஏழை,எளிய மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர். உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சித்திரக்கூடம் பகுதியில் உடுமலை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டுமுதல் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் பராமரிப்பின்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மரங்கள் முளைத்து பராமரிப்பின்றி காணப்படும் மேற்கூரை.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘அம்மா மருந்தக கட்டிடத்தின் மேற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள தண்ணீர் தொட்டியை ஒட்டி மரங்கள் முளைத்து புதர்போல காட்சியளிக்கிறது. மரத்தின் வேர்கள் கட்டிடத்தின் மேற்கூரை வழியாக ஊடுருவி கட்டிடத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் அபாய நிலை உள்ளது’’ என்றனர்.

இதுகுறித்து அம்மா மருந்தக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உடுமலை நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் மாதம் ரூ.21,000 வாடகை செலுத்தப்பட்டு, அம்மா மருந்தகம் நடத்தப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை பழுதானது குறித்து ஏற்கெனவே நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x