Published : 01 Jul 2018 10:12 AM
Last Updated : 01 Jul 2018 10:12 AM

போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணை தீவிரம்: சினிமா தயாரிப்பாளர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு

சென்னை

போலி பாஸ்போர்ட் வழக்கில் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இமிகிரேஷன் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது  போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்ததாக வேளச்சேரியை சேர்ந்த வீரக்குமார், அவரது தம்பி பாலசுப்பிரமணியன் மற்றும் இலங்கை தமிழர்கள் 6 பேர் உட்பட 11 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 24-ம் தேதி கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 80 இந்திய போலி பாஸ்போர்ட்கள், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்கள்  மற்றும்  இவற்றை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள்  வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கும்  போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட் டிருந்த இலங்கையை சேர்ந்த இடைத்தரகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த தகவலின்பேரில், திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்தபோது, போலி பாஸ்போர்ட் அலுவலகம் போல இது செயல்பட்டு வருவது தெரியவந்தது. வீரக்குமாரும், அவரது தம்பி பாலசுப்பிரமணியமும் இந்த அலுவலகத்தை நிர்வகித்து வந்தனர். டிராவல்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த கார்த்திகேயன், சரவணன் ஆகியோர் போலி பாஸ்போர்ட்களை அசல் போலவே   தயாரித்து கொடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜெர்மனி, இலங்கை  உட்பட பல நாடுகளில் உள்ள நபர்களுக்கு இவர்கள் பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்துள்ளனர்.   இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாயை கட்டண மாக  வசூலித்துள்ளனர். இவர்கள்  வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு செல்கிறோம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து சென்று, அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனர்.

போலி பாஸ்போர்ட்டை கண்டுபிடிப்பதற்கான சென்ட்ரலைஸ்டு சர்வர் வசதிகள் இந்திய விமான நிலையங்களில் இல்லை. இந்த  குறைபாட்டை பயன்படுத்தி, போலி பாஸ்போர்ட் மூலம் பலர் தப்பித்து விடுகின்றனர். பாஸ்போர்ட்களை வாங்கி, பல ஆண்டுகள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நபர்களிடம் ரூ.25 ஆயிரம் வரை பணம் கொடுத்து அவற்றை வாங்கி,  அதில் புகைப்படத்தை மட்டும் மாற்றி போலி பாஸ்போர்ட் தயாரிக்கின்றனர்.    அந்த நபர் எந்த நாட்டுக்கு  செல்ல வேண்டுமோ அந்த நாட்டுக்கு ஏற்கெனவே சென்று வந்தது போல போலியான முத்திரையை பாஸ்போர்ட்டில் பதிக்கின்றனர்.  பின்னர் அந்த நாட்டுக்கான  விசா பெற விண்ணப்பிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் ஏற்கெனவே வந்து சென்றவர் என்ற எண்ணத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் விசா கிடைத்துவிடுகிறது.

போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுக்க  ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், விசாவுக்கு  ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும் வசூல் செய்துள்ளனர். இப்படி போலியாக பாஸ்போர்ட், விசா பெற்றவர்கள் பிரச்சினை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் ஒரு குடியேற்றப்பிரிவு (இமிகிரேஷன்)அதிகாரியையும் பழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.

போலி பாஸ்போர்ட் பெற்றவர்களை விமான நிலையம் வரை அழைத்துச் சென்று இவர்களுக்கு பழக்கமான இமிகிரேஷன் அலுவலர் இருக்கும் கவுன்ட்டர் வழியாக செல்ல வைக்கின்றனர். அந்த இமிகிரேஷன் அலுவலரும் போலி பாஸ்போர்ட் கொண்டு வருபவர்களை  உள்ளே அனுப்பியுள்ளார். அவர்களுக்கு உடந்தையாக இருந்த இமிகிரேஷன் அதிகாரிகள் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள், வெளிநாடு செல்வதற்காக அதிக  அளவில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். சினிமா தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் சூட்டிங் பணிகளுக்காக பலருக்கு போலி பாஸ்போர்ட் வாங்கி வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். வீரக்குமார் மூலம் திரைத்துறையை சேர்ந்த சுமார் 200 பேர் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். தீவிரவாதிகள் யாராவது வீரக்குமார் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார்களா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். போலி பாஸ்போர்ட் தயாரிப்பது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்.

யார் இந்த வீரக்குமார்?

வீரக்குமார், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர். சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய இவர், பின்னர் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.  2016 - ம் ஆண்டு பெரும்புதூர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்விடைந்தார். தொழில் அதிபர்  என்ற போர்வையுடன் வீரக்குமார்  கடந்த 18 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வந்துள்ளார்.  இவர் மீது கோயில்  சிலை திருட்டு மற்றும் கொலை வழக்குகளும்  உள்ளன. போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்  போலீஸில் சிக்கியுள்ளார்.  அதன் பிறகு இப்போதுதான் ஆதாரத்துடன் இவர் பிடிபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x