Last Updated : 14 Mar, 2025 10:43 AM

1  

Published : 14 Mar 2025 10:43 AM
Last Updated : 14 Mar 2025 10:43 AM

வாஜ்பாயா... மோடியா..? - பேருந்து நிலையத்துக்கு பெயர் சூட்ட போட்டி போடும் பாஜக கோஷ்டிகள்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், பெயருக்குத்தான் கூட்டணி ஆட்சியே தவிர, இரண்டு கட்சிகளும் ஒட்டாமல் தான் உறவாடி வருகின்றன. இதைவிட விநோதம் என்னவென்றால், பாஜக-வுக்குள்ளேயே இங்கே பல கோஷ்டிகளாக இருக்கிறார்கள்.

புதுச்சேரியில் ​பாஜக அமைச்​சர்​கள், பாஜக நியமன எம்​எல்​ஏ-க்​கள் ஓர் அணி​யாக இருக்​கி​றார்​கள். இன்​னொரு பக்​கம், பாஜக எம்​எல்​ஏ-க்​கள், பாஜக ஆதரவு சுயேச்சை எம்​எல்​ஏ-க்​கள் ஓர் அணி​யாக நிற்​கி​றார்​கள். பாஜக எம்​எல்​ஏ-க்​களான ஜான்​கு​மாரும் கல்​யாணசுந்​தர​மும் சுழற்சி முறை​யில் தங்​களுக்கு அமைச்​சர் பதவி கோரினர்.

அது நடக்​காது என்று தெரிந்​ததும், வாரி​யத் தலை​வர் பதவிக்கு அடி​போட்​டனர். ஆனால், அதற்​கும் அசைந்து கொடுக்​க​வில்லை முதல்​வர் ரங்​க​சாமி. இதனால் இவர்​கள் ரங்​க​சாமியை கடுமை​யாக விமர்​சித்து வரு​கி​றார்​கள். சட்​டப்​பேரவை படிக்​கட்​டு​களில் அமர்ந்து போராட்​டம் நடத்​தி​யதுடன் பேர​வை​யிலும் முதல்​வரை விமர்​சனம் செய்து பேசினர். கூட்​ட​ணி​யில் இருந்து கொண்டே அரசின் கொள்கை முடிவு​களை விமர்​சித்து போராட்​டங்​களை நடத்​துகி​றார்​கள். ஆனால், இதையெல்​லாம் மாநில பாஜக தலைவர் செல்​வகண​தி​யும், மேலிடப் பொறுப்​பாளர் நிர்​மல் குமார் சுரா​னா​வும் கண்​டும் காணாதது போலவே இருக்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், புதி​தாக கட்​டி​முடிக்​கப்​பட்ட பேருந்து நிலை​யத்​துக்கு பெயர் சூட்​டும் விஷ​யத்​தில் வாஜ்​பா​யா, மோடியா என பாஜக கோஷ்டிகள் போட்​டி​போட்​டுக் கொண்டு மனு கொடுத்து வரு​கின்​றன. புதுச்​சேரி மறைமலைஅடிகள் சாலை​யில் இருந்த ராஜீவ்​காந்தி புதிய பேருந்து நிலை​யம் இடிக்​கப்​பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​தில் ரூ. 29.55 கோடி​யில் புதி​தாக கட்டி முடிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த பேருந்து நிலை​யத்​தின் வெளியே ‘ராஜீவ்​காந்தி புதிய பேருந்து நிலை​யம்’ என பெயர் பலகை​யை​யும் அதி​காரி​கள் மாட்​டி​விட்​டனர். இந்த நிலை​யில், பேருந்து நிலை​யத்​தின் பெயரை மாற்ற வேண்​டும் என பாஜக கோஷ்டிகள் கொடிதூக்​கி​யுள்​ளன.

இது தொடர்​பாக மாநில பாஜக பொதுச்​செயலாளர் மோகன்​கு​மார் தலை​மை​யில் அமைச்​சர் நமசி​வா​யத்தை அண்​மை​யில் சந்​தித்த பாஜக நிர்​வாகி​கள், புதி​தாக கட்​டப்​பட்ட பேருந்து நிலை​யத்​துக்கு வாஜ்​பாய் பெயரை சூட்ட வேண்​டும் என வலி​யுறுத்​தினர். இதே கோரிக்​கையை பாஜக முன்​னாள் மாநிலத்​தலை​வர் தாமோதரும் வைத்​துள்​ளார். ஆனால் ஊர்​வல​மாக வந்து அமைச்​சர் நமசி​வா​யத்தை சந்​தித்த பாஜக எம்​எல்​ஏ-க்​களோ, புதிய பேருந்து நிலை​யத்​துக்கு பிரதமர் மோடி பெயரைச் சூட்​ட​வேண்​டும் எனக் கோரிக்கை மனு கொடுத்​தனர்.

ஏற்​கெனவே இந்​தப் பேருந்து நிலை​யத்​துக்கு வைக்​கப்​பட்ட ராஜீவ் காந்தி பெயரை மாற்​றக் கூடாது என காங்​கிரஸ் தரப்​பிலும் குரல்​கள் ஒலிக்​கின்​றன. இதுபற்றி நம்​மிடம் பேசிய புதுச்​சேரி மாநில காங்​கிரஸ் தலை​வர் வைத்​தி​லிங்​கம், “பேருந்து நிலை​யத்​துக்கு வாஜ்​பாய் பெயரை சூட்​டு​வது தொடர்​பாக பாஜக-​வினர் என்​னிடம் வந்து பேசி​னார்​கள்.

நாட்​டுக்​காக உயிர் தியாகம் செய்த தலை​வர் ராஜீவ் காந்​தி​யின் பெயரை ஏற்​கெனவே பேருந்து நிலை​யத்​துக்கு வைத்து விட்டோம். ஆகவே, அதை மாற்ற வேண்​டாம். புதுச்​சேரி​யில் பெரிய மேம்​பாலம் பல நூறு கோடி செல​வில் கட்​டப்​பட​விருக்​கிறது. அந்​தப் பாலத்​துக்கு வேண்​டு​மா​னால் வாஜ்​பாய் பெயரை வைக்​கலாம் எனச் சொல்​லி​விட்​டேன்” என்​றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட அதி​காரி​களோ, “பேருந்து நிலை​யத்​துக்கு ஏற்​கெனவே திட்​ட​மிட்​ட​படி முன்பு இருந்த பெயரையே அறி​விப்பு பலகை​யில் வைத்​துள்​ளோம்” என்​கின்​ற​னர். கட்டி முடிக்​கப்​பட்டு மாதக் கணக்​கில் கிடப்​பில் போடப்​பட்​டுள்ள பேருந்து நிலை​யத்தை திறப்​ப​தற்கு போட்டி போடாத பாஜக-​வினர், பேருந்து நிலை​யத்​துக்கு பெயர் சூட்​டும் விவ​காரத்​தில் போட்டி போட்டு தங்கள் பவரைக் காட்​டிக் கொண்​டிருப்​பதை என்​ன​வென்று சொல்​வது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x