எரிவாயு நிறுவனங்களில் இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவை வழங்குவது நவீன வகை இந்தி திணிப்பு: அன்புமணி, ஜவாஹிருல்லா கண்டனம்

எரிவாயு நிறுவனங்களில் இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவை வழங்குவது நவீன வகை இந்தி திணிப்பு: அன்புமணி, ஜவாஹிருல்லா கண்டனம்
Updated on
1 min read

இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையை வழங்குவது என்பது எரிவாயு நிறுவனங்களின் நவீன வகை இந்தித் திணிப்பாகும் என பாமக தலைவர் அன்புமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புமணி: சமையல் எரிவாயு நிறுவனங்களான, இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கான இலவச தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுகின்றன.

இதுவும் ஒருவகை நவீன இந்தித் திணிப்பே ஆகும். இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வணிகம் செய்துவரும் நிலையில், தமிழ் மொழியில் சேவையை வழங்க வேண்டும். ஆனால் இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால், மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது.

தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழக மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தித் திணிப்பை கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: எரிபொருள் நிறுவனங்களின் கட்டணமில்லா உதவி எண்ணில் புகார் பதிவு செய்வோருக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கப்படுவதால் தமிழக மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை விருப்பங்களாகத் தேர்ந்தெடுத்தாலும், எண்ணை நிறுவன அலுவலர்கள் இந்தியில் மட்டுமே பதிலளிக்கிறார்கள். இந்தியைத் திணிக்கும் எண்ணை நிறுவனங்களின் இந்த ஆதிக்க உணர்வை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in