Published : 14 Mar 2025 06:17 AM
Last Updated : 14 Mar 2025 06:17 AM
சென்னை: உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரணவ் வெங்கடேஷுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதற்கேற்ப, தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்று சாதனை: அந்த வகையில், பெட்ரோவாக்கில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் வெங்கடேஷ் (18) வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். அவருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் பிரணவ் வெங்கடேஷின் பெற்றோர் உடன் இருந்தனர்.
பிரணவ் வெங்கடேஷ் கடந்த 2022-ம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்றார். கடந்த 2024 நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற அவருக்கு பரிசு தொகையாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT