

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 17-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுர்க்கத்தில் 7 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 6 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருப்பூர் மவாட்டம் குண்டடம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வரும் 15, 16, 17-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.