முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீடு ₹-க்கு பதிலாக ‘ரூ’ இடம்பெற்றதால் சர்ச்சை

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீடு ₹-க்கு பதிலாக ‘ரூ’ இடம்பெற்றதால் சர்ச்சை
Updated on
2 min read

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ இடம்பெற்றதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என குறிப்பிட்டு, ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இந்திய ரூபாய்க்கென தனிக்குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இவர், ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.

அவர் வடிவமைத்த ரூபாய் குறியீடு, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை பட்ஜெட்டில் அந்த குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டுகூட தமிழக பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை ‘ரூ’ என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தச் சூழலில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டிருப்பதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழகத்தின் 2025-26-ம் ஆண்டுகான பட்ஜெட் இலச்சினையில், ரூபாய் அடையாள குறியீடு மாற்றப்பட்டுள்ளது. தமிழரான உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட குறியீடு, முழு பாரதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூபாய் தாள் மற்றும் நாணயத்தில் இணைக்கப்பட்டது. உதயகுமார் முன்னாள் திமுக எம்எல்ஏ-வின் மகன்’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை முதலில் தமிழ் பெயராக மாற்றிக் கொள்ளட்டும். திமுக அரசின் அனைத்து தோல்விகளையும் மறைக்க இந்த நாடகம் தொடர்கிறது. திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையும், தேச விரோத மனநிலையையும் பேசுகிறது’ என தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ‘ஏற்கெனவே இந்திய நாட்டை ஒன்றியம் என்று குறி்ப்பிடுகின்றனர். ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்துகின்றனர். மத்திய அரசுடன் அனைத்து வகையிலும் மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர். இந்திய அரசுக்கு எதிராக வன்மத்துடன் செயல்படுகின்றனர். தேசிய சின்னங்களை அவமதிப்பது சட்டப்படி குற்றம். திமுக அரசை அரசியல் சாசனப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைக்க வேண்டும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறும்போது, ‘‘இதில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை. இது ஒரு 'மோதல்' அல்ல. நாங்கள் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதனால்தான் தமிழக அரசு குறியீட்டை மாற்றியமைத்தது. ‘ரூ’ என தமிழில் போடுவதை எந்த சட்டமும் எதிர்க்கவில்லை, தடுக்கவில்லை. பின்னர் ஏன் இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in