

முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்.24-ம் தேதி முதல்வர் மருந்தகங்களை தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் கூறியதாவது: முதல்வர் மருந்தகங்கள் வாயிலாக பல்வேறு முதல் தலைமுறை தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர். இது நம் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
முதல்வர் மருந்தகங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகளான வாடிக்கையாளர்களை மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும். தேவையான மருந்து, மாத்திரைகளை தட்டுப்பாடு இன்றி, இருப்பு வைத்து, மருந்து இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல்வர் மருந்தகங்களை இணைப்பதிவாளர்கள், உரிய அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருந்தகத்திலும் தேவையான மருந்துகள் 48 மணி நேரத்துக்குள் சென்றடைந்ததா? எந்த மாதிரியான மருந்துகள் எந்தெந்த மருந்தகத்தில் தேவைப்படுகின்றன? என்ற விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.
மருந்து கொள்முதல் பணிகள் தொய்வில்லாமல் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருந்துகள் இருப்பு பராமரிப்பு விபரம் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க பார்மசி கவுன்சில் ஆலோசனை பெற்று வல்லுநர் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் முதல்வர் மருந்தகங்கள் குறித்த விளம்பரப் பதாகைகள் அமைக்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் துறை செயலர் சத்யபிரத சாஹூ, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.