Published : 14 Mar 2025 12:24 AM
Last Updated : 14 Mar 2025 12:24 AM
சூரியனார்கோயில் ஆதீனத்துக்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு போய்விட்டதாக முன்னாள் ஆதீனம் மகாலிங்கசுவாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூரை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இதனால் அவர் ஆதீனமாக இருக்கும் தகுதியை இழந்து விட்டதாக சூரியனார்கோயில் ஆதீன ஸ்ரீகாரியங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமி அறிவித்தார். மடத்தில் இருந்து ஆதீனம் வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆதீன நிர்வாகப் பொறுப்புகளை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்த மகாலிங்க சுவாமி, ஓய்வெடுக்கப் போவதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டார். நான்கு மாதங்களுக்குப் பிறகு மகாலிங்க சுவாமி நேற்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராமிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னை சமூக விரோதிகள் சிலர் விமர்சித்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துரத்திவிட்டனர். இது ஏன் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. தற்போதுதான் ஊர் மக்கள் அதற்கான விடையைக் கூறியுள்ளனர்.
ஆதீன மடத்தில் நான் இல்லாத நேரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க சிலைகள், விலை உயர்ந்த மரகதப் படிகங்களை சிலர் எடுத்துச் சென்று விட்டனர். எனவே, தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
மேலும், எனது உயிருக்கும், சூரியனார்கோயில் ஆதீன சொத்துக்கும் சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் மகாலிங்க சுவாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நான் வட மாநிலங்களுக்கு யாத்திரை சென்றிருந்தேன். ஆத்மார்த்த சுவாமிகள் படிக லிங்கம், ஒரு அடி உயரம் கொண்ட நந்தியம் பெருமான், நடராஜர்–சிவகாமசுந்தரி, முருகன் ஐம்பொன் சிலை என ரூ.100 கோடி மதிப்புள்ள சிலைகள் திருட்டு போய்விட்டன. இதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி புகார் அளித்துள்ளேன். நான் மீண்டும் ஆதீனமாக தொடர உள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT