Last Updated : 11 Jul, 2018 09:13 PM

 

Published : 11 Jul 2018 09:13 PM
Last Updated : 11 Jul 2018 09:13 PM

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பல கோடி மோசடி: 80 நாட்களாக தேடப்பட்டு வந்த சந்துருஜி கைது

ஏடிஎம் திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக 80 நாட்கள் இருந்த சந்துருஜி இன்று கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தெரிந்தது. பணம் பறிகொடுத்தோரும் உள்ளூர் தொடங்கி வெளிநாட்டவர் வரை இருந்தனர்.

இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சந்துருஜி தலைமறைவானார். இதனால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவ்வழக்கில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தியவர், டாக்டர், வியாபாரிகள் தொடங்கி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியா, சந்துருஜியின் தம்பி மணிசந்தர், சந்துருஜிக்கு மூளையாக செயல்பட்ட பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான் உள்பட 15 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். சந்துருஜியை மட்டும் எப்போது கைது செய்வார்கள் என்று கேள்வி எழுந்தபடி இருந்தது.

இந்நிலையில் சந்துருஜியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். சிபிசிஐடி எஸ்எஸ்பி ராகுல் அல்வால் செய்தியாளர்களிடம் இன்று இரவு டிஜிபி அலுவலகத்தில் கூறியதாவது:

''சந்துருஜி பஸ் மூலமாகவே கோவை, சென்னை, பூனா, மும்பை, டெல்லி என பல நகரங்களுக்கு சென்று வந்தார். அவர் வாட்ஸ் அப் மூலமாகவே பேசி வந்துள்ளார். அதனால் தனியாக அவர் பேசும் முறையை கணக்கிட்டு திட்டம் வகுத்து, சென்னையில் ஒரு குழுவினர் தங்கியிருந்தனர். அதன் மூலம் தற்போது பிடிபட்டார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளோம்.

தனது பெயரிலும் மற்றவர்களிடமிருந்து ஸ்வைப்பிங் இயந்திரம் வாங்கி தனக்கு மூளையாக செயல்பட்டோருக்கு விநியோகம் செய்துள்ளார். அவரின் மூளையாக செயல்பட்டோர் போலி ஏடிஎம் கார்டுகளை தயார் செய்து பல கோடி ரூபாய் திருடி அசையும், அசையா சொத்துகளை வாங்கியுள்ளனர். கைதாகியுள்ள சந்துருஜி தரகர் போன்றே செயல்பட்டுள்ளார்.

வங்கி ஏடிஎம் அட்டை, கடன் அட்டையைப் பயன்படுத்தும் போது இணையத்தில் விவரங்கள் பதிவாகும். அத்துடன் ஒரு சில இணையப் பயன்பாட்டில் வங்கி அட்டைகளின் பின்புறமுள்ள 'சிவிவி' எண் பதிவாகும். இந்த விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து ஏடிஎம் திருட்டு வழக்கில் மூளையாகச் செயல்பட்டோர் (பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான்) வாங்கியுள்ளனர். ஒரு தகவகைப் பெற 4 டாலர் கொடுத்துள்ளனர்.

வங்கி அட்டை விவரங்கள் பெற்று அதன் மூலம் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்து அதை டிராவல் ஏஜென்சி மூலம் குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளனர். அதிகளவில் அமெரிக்க கார்டுகளில்தான் திருடியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டோர் அமெரிக்கா, ஸ்வீடன், இத்தாலி, சவுதி உட்பட பல நாடுகளை சேர்ந்தோராக இருக்கின்றனர். அவர்களில் பலரை நாங்களே தொடர்பு கொண்டு பேசினோம். குறிப்பாக 140 பேர் பாதிக்கப்பட்டோராக அடையாளம் கண்டுள்ளோம்.

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணம் பயன்பாடு இருந்தால் வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வராது. இந்தியாவில் மட்டுமே எஸ்எம்எஸ் வரும் என்பதும் திருடர்களுக்கு வசதியாகி விட்டது.

வங்கி அட்டை விவரங்களை ஆனியன் (onion) என்ற இணையத்துக்கு சென்றுதான் திருடர்கள் ஹேக்கர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். இந்த இணையத்துக்குள் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களின் மூலம் பயன்படுத்த முடியாது. டோர் (Tor) என்ற பிரவுசர் மூலமே பயன்படுத்த முடியும். இந்த பிரவுசரினால் பயன்பாட்டாளர்களை கண்டறிவது கடினம். பல நவீன முறைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

தலைமறைவாக இருந்து தற்போது பிடிபட்ட சந்துருஜியிடம் விசாரித்து வருகிறோம். அரசியல் தொடர்பு பற்றி இதுவரை எவ்வித தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்று ராகுல் அல்வால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x