

சென்னை: டாஸ்மாக் தலைமை நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை சார்ந்த புள்ளிவிவரங்களை உயர்த்தியும் இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இந்த முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் கலால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் மூன்று நாட்கள் சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு, எஸ்என்ஜெ, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், அவற்றின் ஆலைகள், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், முன்னாள் மதுவிலக்கு இணை ஆணையர் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேநேரம், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அமலாக்கத் துறை டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நபர்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளையொட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், மார்ச் 6-ம் தேதி முதல் அன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த விசாரணையைத் தொடங்கியது. இந்த முதல் தகவல் அறிக்கைகளில், டாஸ்மாக் கடைகளில் உண்மையான விற்பனை விலையைவிட அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுவதாகவும், மதுபான கொள்முதலுக்காக, மதுபான உற்பத்தி தயாரிப்பு நிறுவனங்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதாகவும், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களின் பணியிடமாற்றம், பதவி உயர்வுக்காக மேல் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட புகார்கள் இடம்பெற்றிருந்தன.
டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இடமாற்றப் பதிவுகள், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்ட இன்டென்ட் ஆர்டர்கள், டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகமாக கட்டணம் வசூலித்தது தொடர்பான தரவுகள், அதில் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கு உண்டான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
> டாஸ்மாக்கின் போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. விண்ணப்பதாரரின் கேஒய்சி (KYC) விவரங்கள் கூட முழுமையாக பெறாமல் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதி ஏலத்தில் ஒரே ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்தபோதிலும் அவருக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளது.
> டாஸ்மாக் பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில், டெண்டர் நிபந்தனைகளை கையாண்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. ஜிஎஸ்டி, பான் எண்கள் இல்லாதவர்களுக்கும், முறையான கேஒய்சி ஆவணங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் இறுதி டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
> மதுபான நிறுவனங்களுக்கும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்ததை இந்த சோதனையின்போது கிடைத்துள்ள ஆவணங்கள் உறுதி செய்திருக்கின்றன. இதனால், இவர்களுக்கு தேவையற்ற சலுகைகள் கொடுத்துள்ளதும் இந்தச் சோதனையின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
இந்தச் சோதனையில் மிகப் பெரிய அளவில் மதுபான தயாரிப்பு நிறுவனங்களான எஸ்என்ஜெ, கல்ஸ், அக்கார்ட், SAIFL மற்றும் சிவா ஆகியவையும், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ் மற்றும் ஜிஎல்ஆர் ஹோல்டிங் ஆகிய பாட்டில் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின் மூலம் ரூ.1,000 கோடி அளவில் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை சார்ந்த புள்ளிவிவரங்களை உயர்த்தியும் இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இந்த முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.