Published : 13 Mar 2025 06:29 PM
Last Updated : 13 Mar 2025 06:29 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14) தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில், காலை 9.30 முதல் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாள் (மார்ச் 15) காலை 9.30 மணி முதல் வேளாண் பட்ஜெட் தாக்கலும் எல்இடி திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதேபோன்று இதர 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்கள், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்கள் என மொத்தம் 936 இடங்களில் இன்று பொது பட்ஜெட் நிகழ்வும், நாளை வேளாண் பட்ஜெட் நிகழ்வும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT