தமிழக அரசின் பட்ஜெட் இலச்சினையில் ₹ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ தமிழ் எழுத்து!

தமிழக அரசின் பட்ஜெட் இலச்சினையில் ₹ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ தமிழ் எழுத்து!
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான இலச்சினையில், தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கான, இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட' என்ற வாசகத்துடன், “2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்திய ரூபாயை குறிக்கும் வகையில், தற்போது ₹ என்ற குறியீடே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்த இலச்சினையில் ‘ரூ’ என்ற தமிழ் எழுத்து இடம்பெற்றுள்ளது. ரூபாய் என்பதைக் குறிப்பிட ‘ரூ’ என்பது தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மைக் காலமாக மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மத்திய மாநில அரசுகள் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் இலச்சினையில் தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது, தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in