Published : 13 Mar 2025 06:30 AM
Last Updated : 13 Mar 2025 06:30 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி - பரந்தூர் வரை நீட்டிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
இத்திட்டத்தில் கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கவும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிக்கவும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நீட்டிப்பு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் அனுமதி அளித்தது. இதற்கிடையில், கோயம்பேடு - பட்டாபிராம் (வெளிவட்ட சாலை) வரை நீட்டிப்பு பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கடந்த மாதம் 21-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பதற்கான விரிவானதிட்ட அறிக்கை தமிழக அரசிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபாலிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சமர்ப்பித்தார். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொதுமேலாளர் (திட்டம், திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு, பூந்தமல்லியில் இருந்து தொடங்கி செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாகச் சென்று பரந்தூர் விமான நிலையத்தில் முடிவடைகிறது. இது, குத்தம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் முன்மொழியப்பட்ட பசுமைவெளி விமான நிலையத்துக்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
திட்ட செலவு மற்றும் செயல்படுத்தல் நேரத்தை மேம்படுத்துவதற்காக, பூந்தமல்லி மற்றும் பெரும்புதூர் இடையேயான 5.9 கி.மீ. தொலைவுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்ட உயர்த்தப்பட்ட வழித்தடத்துடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் 52.94 கி.மீ தொலைவுடன் 20 உயர்த்தப்பட்ட நிலையங்கள் இடம்பெறும்.
மதிப்பிடப்பட்ட நிறைவுசெலவு ரூ.15,906 கோடி. திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை முதல்கட்டத்தின் கீழ் செயல்படுத்த ஆலோசகர் பரிந்துரைத்துள்ளார். இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 27.90 கி.மீ. 14 உயர்த்தப்பட்ட நிலையங்கள் இடம்பெற்று உள்ளன மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ. 8,779 கோடி ஆகும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT