Published : 13 Mar 2025 07:20 AM
Last Updated : 13 Mar 2025 07:20 AM
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மார்ச் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தமிழக அரசு தடை செய்தது செல்லும். ஆனால் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்தது.
மேலும், ஆன்லைன் ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கு வயது, நேரம் ஆகியவற்றில் கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் விளையாட முடியாதபடி நேர கட்டுப்பாடு விதித்தும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பல்வேறு தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவி்ட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT