Published : 13 Mar 2025 07:15 AM
Last Updated : 13 Mar 2025 07:15 AM
சென்னை: தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரும் மார்ச் 18-ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தேசித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 3.11 கோடி ஆண் வாக்காளர்கள், 3.24 கோடி பெண் வாக்காளர்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஞானேஷ்குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்டதேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலோசனைகளைப் பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகாண வேண்டும். அது தொடர்பான விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்த உத்தேசித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் பிரதிநதிகள் பங்கேற்க உள்ளனர். இதில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்காமல் இருப்பது உள்ளிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குச்சாவடிகள் அமைவிடம் தொடர்பான ஆட்சேபனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT