

சென்னை: மாதவரத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மாதவரம் பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் பேருந்து நிலையம் டிரக் டெர்மினல் அருகே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த 7 பேரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கைமாற்றுவதற்காக அவர்கள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கரணை ராகுல் (24), முத்துராஜன்(29), வேளச்சேரி சதீஷ்குமார் (32), தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆவடி அஜய் (26), கால்சென்டரில் பணியாற்றும் பாடி நிஸ்டல் (27), மண்ணடி சமீம் பிர்தவுஸ் (31), பல்லாவரம் புருஷோத்தமன் (23) ஆகிய 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிராம் மெத்தம் பெட்டமைன், 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
1,800 போதை மாத்திரைகள்: மதுரவாயலில் போதை மாத்திரை விற்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், மதுரவாயல் பாலம் அருகே தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களது பையை சோதனை செய்ததில், 1,800 போதை மாத்திரைகள், 10 சிரிஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, நெசப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய் (24), கார்த்திகேயன் (24) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.