Published : 13 Mar 2025 06:04 AM
Last Updated : 13 Mar 2025 06:04 AM

நடைபாதைகளை தூய்மைப்படுத்த 30 பிரத்யேக வாகனங்கள்: சென்னை மேயர் தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை 30 வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானங்கள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து மண்டலங்களில் பேருந்து சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 925 பேருந்து நிழற்குடைகள் மற்றும் 173 நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் சேவை தொடக்க விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.

முதற்கட்டமாக ஒரு மண்டலத்துக்கு தலா 2 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் உயர் அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் பொது (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ``சென்னை மாநகராட்சியில் 419 பள்ளிகள் உள்ளன. அவற்றில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக புகார்கள் ஏதும் வரவில்லை. வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடைபாதைகளை தூய்மைப்படுத்தும் வாகனங்கள் பயன்பாட்டைப் பொருத்து, அவற்றின் எண்ணிக்கை 47 ஆக உயர்த்தப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x