Published : 12 Mar 2025 02:21 PM
Last Updated : 12 Mar 2025 02:21 PM
திருவாரூர்: மூன்றாவது மொழி அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது: பேரறிஞர் அண்ணா இருந்திருந்தால் காலத்தின் தன்மை கருதி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். திமுகவினர் தொடர்புடைய பள்ளிகள், அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் அனைத்திலும் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மட்டும் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறானது.
முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மூன்றாவது மொழிக் கொள்கையை அனுமதிப்பது குறித்தும், இந்தியை பயிற்றுவிப்பது குறித்தும் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தை பற்றி அவதூறாக எதையும் பேசவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி விட்டனர். இதைத்தான் மத்திய அமைச்சர் குறிப்பிடுகிறார்.
ஆட்சியில் இல்லாத போது பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர், ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு கருணாநிதியின் நாணயம் வெளியிடவும், சிலை திறக்கவும், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகவும், மத்திய அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லிக்கு நேரில் சென்று காத்துக் கிடந்து அழைத்து வந்தனர். தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை கேட்பதற்கு நேரில் சென்று பிரதமரை சந்தித்து கேட்க மறுக்கின்றனர்.
மத்திய அரசு நிதி கொடுக்காமல் போனாலும் பார்த்துக் கொள்வோம் என கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மின்கட்டணம் கூட செலுத்த முடியாமல் ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலுத்தி வருகின்ற நிலை உள்ளது. திமுகவை பொருத்தவரை கச்சத்தீவு, காவிரி பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, டங்ஸ்டன் திட்டம், தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் தெரிவித்தது போன்ற பல்வேறு விஷயங்களிலும் முன்கூட்டியே சம்மதம் தெரிவித்து விட்டு, பின்னர் மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அதிலிருந்து பின்வாங்கி விடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது பள்ளி அருகாமையிலேயே போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
அமமுக தற்சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை ஒரு சிலரை தவிர தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். இரட்டை இலையை வைத்திருப்பவர்தான் உண்மையான அதிமுக என நினைத்துக் கொண்டு இருக்கும் தொண்டர்கள் தேர்தலுக்குப் பின்பு அதனை உணர்வார்கள். இவ்வாறு தினகரன் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, தஞ்சை மண்டல நிர்வாகி ரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT