

சென்னை: போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகள் பெறும் வகையில் பணியாற்றியமைக்காக பணியாளர்களை துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்துக் கழகங்கள் கூட்டமைப்பின் விருதை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான விருதுகளில் 19 விருதுகள் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை டெல்லியில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடியிடம் இருந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகள் பெறும் வகையில், தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தித் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி. சிறப்பாக பணியாற்றிய ஒட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.