

சென்னை: கல்விக்கு நிதி ஒதுக்க மறுப்பது மொழி உரிமை மீதான தாக்குதல் என்று திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு விர்சி்த்துள்ளார்.
மாநிலங்களவையில் கல்வி தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்ததிலிருந்துதான் பெரும் போராட்டங்கள், பிரச்சினைகள், அர்த்தமற்ற கொள்கை முடிவுகள் போன்றவற்றால் நாட்டின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது.
கல்வி தொடர்பான விஷயங்களில் மாநில சுயாட்சியை, மாநிலத்துக்கென உள்ள அதிகாரத்தை பறிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை மாற்றி, கூட்டாட்சித் தத்துவத்துக்கென உருவாக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளைத் தகர்ப்பது போன்ற காரியங்கள் இப்போது நடந்தேறி வருகின்றன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சிந்திக்கும் முன்பாக 1947-லேயே கட்டாயக் கல்வியை சட்டமாக்கியது தமிழகம்தான். மதிய உணவுத் திட்டத்தால், பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்து, கல்வியறிவு பெற்றோர் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் எப்போதும் உயர்ந்து நிற்கிறது. இலவச சீருடை, சைக்கிள், லேப்டாப் என வழங்கி கல்வி கற்பதில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்கிய மாநிலமும் தமிழகம்தான்.
காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி, இரு மொழிக் கொள்கையை உறுதிபடத் தொடர்ந்து அமல்படுத்தியதால்தான் பள்ளிக்கல்வித் தரம், உயர் கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதம் ஆகியவற்றில் தமிழகம் உயர்ந்து நின்று மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஆனால், இந்த பாஜக அரசு தவறான தெளிவற்ற, சமூகநீதிக்கு எதிரான கொள்கைகளை ஏற்கச் சொல்லி தமிழகத்தை நிர்பந்திக்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்க வலியுறுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொன்னதற்காக சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை தராமல் நிறுத்தி வைப்பது எந்த வகையில் நியாயம். நியாயமாக வழங்க வேண்டிய கல்வி நிதியைத் தராமல் தாமதிப்பதும் மறுப்பதும் மாநில சுயாட்சி மீதும், தேச ஒற்றுமை மற்றும் மொழி உரிமை மீதும் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.