Published : 11 Jul 2018 09:02 AM
Last Updated : 11 Jul 2018 09:02 AM

பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்: திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் வேலைவாய்ப்புக்கான புதிய தொழில் நிறுவன கொள்கை உருவாக்கம் மற்றும் திறன்மேம்பாடு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகத்துக்கென தனிச்சிறப்பு உண்டு. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு விதமான படிப்புகள் வழங்கப்படும் சிறப்பு ஒருபுறம். மற்றொரு புறம் இந்தியாவில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். உயர்கல்வித் துறையில் செய்யப்பட்ட முதலீடுகளே இந்தச் சிறப்புகளுக்குக் காரணம். ஆண்டுதோறும் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தியாவில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். அந்த வகையில், பல்கலைக்கழகங்களும், ஆளுநர் மாளிகையும் இணைந்து திறன்மேம்பாட்டு கருத்தரங்கை நடத்துகின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படும் பயனுள்ள விஷயங்களை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

உயர்கல்வியின் இருப்பிடங்கள்

பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உயர்கல்வியின் இருப்பிடங்களாக திகழ்கின்றன. உயர்கல்வி கற்கும்போது வெளிப்படைத்தன்மை, திறன், நேர்மை ஆகிய பண்புகளைப் பின்பற்றுவது முக்கியம். அந்த வகையில், பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நேர்மையான முறையில் தேர்வுசெய்வதில் ஆளுநர் மாளிகை முன்னுதாரணமாக விளங்குகிறது. நேர்மையான முறையில் பணியமர்த்தப்படும் துணைவேந்தர்கள் பேராசிரியர்களை நியமிக்கும்போது அதே நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் பின்பற்ற வேண்டும்.

இங்கே அமர்ந்திருக்கிற ஒருசில துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல், ஒழுங்கின்மை காரணமாக கைது மற்றும் சோதனை நடவடிக்கைக்கு ஆளானபோது அனைவருமே ஒருமாதிரியாக உணர்ந்திருப்போம். வேலியே பயிரை மேய்ந்த நிலைதான் இது.

பல்கலைக்கழகங்களி்ல் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் (துணைவேந்தர்கள்) கல்லூரிகளின் நிர்வாகிகள் கைது மற்றும் சோதனை நடவடிக்கைக்கு உள்ளாகும்போதும், மதிப்பீடுகளை பின்பற்றாதபோதும் மாணவர்களிடம் என்ன மதிப்பீடுகளை நாம் எதிர்பார்க்க முடியும்? துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்மாதிரியாக நடக்க வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சஹஸ்புத்தே பேசும்போது, “தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கென ஏஐசிடிஇ தனக்கென பிரத்யேக திறன் மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இதேபோல, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களுக்கான திறன்மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும். படிக்கும் இளைஞர்களில் 5 சதவீதம் பேர் புதிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்தால் இந்தியாவுக்கு மட்டுமல்ல; இந்த உலகத்துக்கே நம்மால் வேலைவாய்ப்பை வழங்க முடியும்’’ என்றார்.

முன்னதாக, ஆளுநரின் செயலர் ஆர்.ராஜகோபால் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். தொடக்க விழாவில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக, துணைவேந்தர் எம்.கே.சுரப்பா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x