தர்மேந்திர பிரதானை கண்டித்து போராட்டம்: தமிழகம் முழுவதும் 11,200 திமுகவினர் மீது வழக்கு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுகவினர் 11,200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாத விவகாரத்தை மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று முன்தினம் எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள் ஆகிய வார்த்தைகளை தமிழக எம்பிக்களை நோக்கி பயன்படுத்தினார். இதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்ததோடு உரிமை மீறல் பிரச்சினையையும் கொண்டு வந்தார்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றுக் கொண்டார். இருப்பினும், அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலவேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திமுகவினர் சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, ஆலந்தூர், ராயபுரம், துறைமுகம் உட்பட 31 இடம் உட்பட தமிழகம் முழுவது 125 இடங்களில் ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 11,200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடையை மீறி ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
