

கோவை: “காவல் துறையை கண்டித்தும், அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தியும் வரும் 25-ம் தேதி, திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது,” என்று அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோவையில் இன்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், பக்தர்களை திரட்டி அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல் துறையினர், அங்கு 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். பின்னர், ஜனநாயக முறையின் படி, நீதிமன்றம் சென்று நீதிமன்ற உத்தரவு பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத அறநிலையத் துறையும், காவல் துறையும் போராட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணியினர் மீது உதகை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். இந்து முன்னணியினர் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் குங்குமம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தச் சென்ற மாநில செயலாளர் செந்தில் உள்ளிட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஏதோ குண்டுவைத்த, பயங்கரவாதிகளை போல் காவல்துறை யினரால் நடத்தப்பட்டுள்ளனர். இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் கெடுபிடி காட்டியுள்ளனர். எனவே, காவல் துறை, தமிழக அரசை கண்டித்தும், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கோட்டையில், அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வரும் 25-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் அபிராமி அம்மன் கோயில் முன்பு, அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில், பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.