Published : 11 Mar 2025 01:12 PM
Last Updated : 11 Mar 2025 01:12 PM
புதுச்சேரி: பெஞ்சல் புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தராததைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைமீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசுகையில், “பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டதில் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் சராசரியாக தந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய அளவில் நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகள், இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் தரவில்லை.”என்றார்.
அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு பேசுகையில், ‘பாதிப்பு நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று உதவுவது அவசியம். பாதிக்கப்பட்ட வீடுகள், விலங்களுக்கு ஏன் இன்னும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர் உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.” என்றனர். திமுக செந்தில்குமார் பேசுகையில், “எங்கள் தொகுதியான பாகூர் கடுமையாக பாதிக்கப்பட்டும் நிவாரணம் தரவில்லை.” என்றார்.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என பல எம்எல்ஏக்கள் குறிப்பிட்டனர். அப்போது கால்நடைத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், “மழை புதுச்சேரியில் மட்டுமா பெய்தது- விழுப்புரம், கடலூரில் பெய்யவில்லையா?” என்றார். எதிர்க்கட்சித்தலைவர் சிவா, "வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கும், கால்நடை இறந்தோருக்கும் ஏன் நிவாரணம் தரவில்லை என்றுதான் கேட்கிறோம். யாரும் தரவேண்டாம் என சொல்லவில்லை. இரட்டை இன்ஜின் ஆட்சி என்று கூறியும் மத்திய அரசு புதுச்சேரி அரசு கோரிய நிவாரணத்தை ஏன் தரவில்லை.” என்றார்.
அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “அரசு நிவாரணம் தர மறுக்கவில்லை. கணக்கெடுப்பு நடக்கிறது. நிதி ஒதுக்கி தருவோம். அது மத்திய அரசு நிதியா, மாநில அரசு நிதியா என்பதை முதல்வர் முடிவு செய்வார் ”என்றார்.அதற்கு பல எம்எல்ஏக்களும் நிதி தர கணக்கெடுப்பு எத்தனை மாதங்கள் நடத்துவீர்கள் என்றனர்.
இந்நிலையில் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தராததையும், அதற்கு பதிலை அரசு தரப்பு தராததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், வி. அனிபால் கென்னடி, எல். சம்பத், நாக. தியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மு. வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT