Published : 03 Jul 2018 09:54 AM
Last Updated : 03 Jul 2018 09:54 AM

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் அபாயம்: வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் அதிகமானதால் ஆர்வம் குறைந்தது; இதுவரை 821 மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்

இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் முன்வராததால் அனைத்து அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர வெறும் 821 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரி யர் பயிற்சிப் படிப்பில் சேர கடுமையான போட்டி இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவ - மாணவிகள் இடையே அடியோடு குறைந்துவிட்டது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளிலும் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. முன்பு 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2008 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வகுப்புகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்பு அந்த இடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்படுகின்றன. இப் படி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிவாய்ப்புகள் சுருக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கை நிலவரப்படி, மொத்தமுள்ள 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,650 இடங்களில் 1,047 இடங்களே நிரம்பின. அதேபோல், 8 அரசு ஆசிரி யர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களில் 113 மாணவர்கள் சேர்ந்தனர். 40 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 3,360 இடங்களில் 459 இடங்களே நிரம்பின. மொத்தமுள்ள 279 தனி யார் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 மட்டுமே நிரம்பின.

மாணவர் சேர்க்கை அடியோடு குறைந்துவிட்டதால் இந்த ஆண்டு மொத்தமுள்ள 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 12-ல் மட்டுமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்தது. மேலும் முன்பு இருந்த இடங்களின் எண்ணிக்கை 3,100-லிருந்து 1,050 குறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் 12 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1,050 இடங்கள், 8 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கடந்த ஆண்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங் கள் ஆகியவை மட்டுமே இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த ஜூன் 18-ல் தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. மொத்தமாகவே 821 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை இப்படியே ஆண்டுதோறும் குறைந்துகொண்டே சென்றால் ஒருகட்டத் தில் அனைத்து அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பயிற்சி நிறுவன அதி காரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x