Published : 11 Mar 2025 06:11 AM
Last Updated : 11 Mar 2025 06:11 AM
சென்னை: சென்னை ஜார்ஜ்டவுனில் ரூ.9.85 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட புராதனக் கட்டிடத்தில் பதிவுத் துறை அலுவலகங்களை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
பதிவுத் துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதனக் கட்டிடம் சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. இக் கட்டிடம் கடந்த 1864-ம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டிடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது.
இப்புராதன கட்டிடம் மெட்ராஸ் நாட்டு தளக்கூரை (Madras Terrace Roof) பின்பகுதி மங்களுர் ஓட்டு கூரை (Mangalore Tiled Roof) மற்றும் தேக்கு மர உத்திரங்களால் ஆன 24,908 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து, வலுவிழந்த நிலையில் காணப்பட்ட இப்புராதனக் கட்டிடத்தை பழமை மாறாமல், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புனரமைக்க அரசு முன்னுரிமை வழங்கி ரூ.9.85 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முடிவுற்ற நிலையில், புனரமைக்கப்பட்ட புராதனக் கட்டிடத்தில் செயல்பட உள்ள பதிவுத் துறையின் சென்னை வடக்கு மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மாவட்ட பதிவாளர் (தணிக்கை) எண்-1 இணை சார் பதிவாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் (களப்பணி) அலுவலகங்களை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், துறையின் செயலர் குமார் ஜயந்த், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT