Published : 11 Mar 2025 12:19 AM
Last Updated : 11 Mar 2025 12:19 AM
தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதிலும் தமிழக அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2003-04 நிதியாண்டு முதல் ‘நிழல் நிதிநிலை அறிக்கை’யை பாமக தயாரித்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2025-26 நிதியாண்டுக்கான ‘நிழல் நிதி அறிக்கை’யை திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் நேற்று வெளியிட மூத்த செய்தியாளர் தங்கவேலப்பன் பெற்றுக்கொண்டார்.
பாமக வெளியிட்டுள்ள ‘நிழல் நிதி அறிக்கை’யில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு: தமிழக பட்ஜெட்டில் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 442 கோடி மொத்த வருவாய் செலவினத்துக்கு ஆனதாகும். இதில் ரூ.46,339 கோடி வருவாய் உபரியைக் கொண்டிருக்கும். நிதி பற்றாக்குறை ரூ.25,536 கோடியாக இருக்கும், 71,855 கோடிக்கு மூலதன செலவுகள் செய்யப்படும்.
நடப்பு நிதியாண்டில் 2.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் 7.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 80 சதவீத இடஒதுக்கீட்டின்படி ஒரு கோடி பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியும், உயர் கல்வித் துறைக்கு ரூ.36 ஆயிரத்து 560 கோடியும் ஒதுக்கப்படுகிறது. மருத்துவ துறைக்கு ரூ.73 ஆயிரம் 120 கோடி, வேளாண் துறைக்கு ரூ.65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மே 1-ம் தேதி முதல் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும். இருமொழிக் கொள்கை தொடரும். தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். ரூ.318-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 90 சதவீத மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏ சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT