

மதுரை: அம்பை - பாபநாசம் சாலை விரிவாக்கப் பணிக்காக அம்பையிலுள்ள நூறு ஆண்டு பழமையான பாரி வேட்டை கல் மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அம்பை காசிநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் சண்முகஜோதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 1500 ஆண்டு பழமையான காசிநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு உப கோயில்கள், மண்டபங்கள் உள்ளன. பாபநாசம் பிரதான சாலையில் தை பாரி வேட்டை கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபம் நூறு ஆண்டு பழமையானது என தொல்லியல் ஆய்வாளர்கள் சான்றழித்துள்ளனர். மண்டபத்தில் விநாயகர் கோயில் உள்ளது. தை பாரி வேட்டையின் போது காசிநாதசுவாமி கோயில், மன்னார்கோவில் ராஜகோபால குலசேகர ஆழ்வார் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அம்பை - பாபநாசம் மேம்பாலம் அமைப்பதற்காக பாரிவேட்டை மண்டபத்தை வேறு இடத்துக்கு மாற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் கல் மண்டபத்தை இடிக்க அனுமதி கோரி நெடுஞ்சாலைத்துறை உதவி மண்டல மேலாளர் கடிதம் அனுப்பினார். இதற்கு பழமையான கல் மண்டபத்தை பாதுகாக்கவும், சாலையின் வடக்கு பகுதியில் 20 அடிக்கு மேல் காலியிடம் இருப்பதால் கல் மண்டபத்தை அகற்றாமல் மேம்பாலம் அமைக்கலாம் என பதிலளிக்கப்பட்டது.
தற்போது அந்த காலியிடத்தில் தான் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் கல் மண்டபத்தை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்நிலையில், 7 நாளில் பதிலளிக்காவிட்டால் கல் மண்டபம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அறிவிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை உதவி மண்டல பொறியாளர் 20.2.2025-ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை ரத்து செய்தும், அதுவரை நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தும், பாரி வேட்டை கல் மண்டபத்தை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், ''இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், நூறு ஆண்டு பழமையான கல் மண்டபத்தை இடிக்க மார்ச் 3-ல் உத்தரவிடப்பட்டுள்ளது. கல் மண்டபம் பழங்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும். இதை பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்க வேண்டும்.
மேலும், உயர் நீதிமன்றம் தாமாக விசாரித்து வரும் வழக்கில், பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு மாறாக கல் மண்டபத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல் மண்டபத்தை இடிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.