

சென்னை: தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, சூரியசக்தி மின்னுற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட வெளிச்சம் அவசியம்.தென்மாவட்டங்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருப்பதால், மின்நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது.
இதனால், பெரிய நிறுவனங்கள் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்து வருகிறது. இதன் காரணமாக, காற்றாலை, சூரியசக்தி நிறுவு திறன் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 2019-20-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 55 மெகா வாட்டாகவும், சூரியசக்தி நிறுவு திறன் 1,276 மெகா வாட்டாகவும், மேற்கூரை சூரியசக்தி திறன் 44 மெகா வாட்டாகவும் இருந்தது.
2020-21-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 43 மெகா வாட்டாகவும், சூரியசக்தி நிறுவு திறன் 348 மெகா வாட்டாகவும், மேற்கூரை சூரியசக்தி திறன் 61 மெகா வாட்டாகவும், 2021-22ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 49 மெகா வாட்டாகவும், சூரியசக்தி நிறுவு திறன் 783 மெகா வாட்டாகவும், மேற்கூரை சூரியசக்தி திறன் 55 மெகா வாட்டாகவும், 2022-23 ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 124 மெகா வாட்டாகவும், சூரியசக்தி நிறுவு திறன் 1,192 மெகா வாட்டாகவும், மேற்கூரை சூரியசக்தி திறன் 101 மெகா வாட்டாகவும் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டில் மட்டும் 278 மெகாவாட் காற்றாலை மற்றும் 1,281 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகா வாட்டாகவும் அதிகரித்துள்ளது.