Published : 10 Mar 2025 12:20 AM
Last Updated : 10 Mar 2025 12:20 AM
கரூர் மாவட்டம் கடவூர் கருணைகிரி பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் நேற்று வழிபாடு நடத்தினர்.
கடவூரில் 700 ஆண்டுகள் பழமையான கருணைகிரி பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஊரில் இந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 200 குடும்பத்தினர், அருந்ததியர் சமூகத்தின் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கருணைகிரி பெருமாள் கோயிலில் 700 ஆண்டுகளாக தேர்த் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாவின் 9-ம் நாளில் தேருக்கு சன்னக்கட்டை போடும் உரிமை தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கானது. ஆனால், அவர்களுக்கு திருவிழாவில் உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வந்தது.
இதனிடையே, 2012-ம் ஆண்டு தேரோட்டத்தின்போது, தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டதையடுத்து, சன்னக்கட்டை போடுவது நிறுத்தப்பட்டு, தேராட்டத்துக்கு பொக்லைன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் சென்று வழிபடவும் அனுமதிக்காத நிலை இருந்தது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டு போலீஸார் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். ஆனால், கடந்தாண்டு அச்சுறுத்தல் காரணமாக பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்லவில்லை.
இதற்கிடையே, கோயிலில் தங்களுக்கான வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி ஆதிதிராவிடர் நலத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு பட்டியலின மக்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து, கருணைகிரி பெருமாள் கோயில் திருவிழா தொடர்பாக குளித்தலையில் பிப்.28-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அனைத்து சமூக மக்களும், கோயிலுக்குள் சென்று வழிபடுவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
தற்போது கடவூர் கருணைகிரி பெருமாள் கோயிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 12-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடவூர் கருணகிரி பெருமாள் கோயிலில் நேற்று பட்டியலின மக்கள் 100-க்கும் அதிகமானோர் நுழைந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். கோயில் அர்ச்சகர் அனைவரிடமும் அர்ச்சனைப் பொருட்களை பெற்றுக் கொண்டு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT