

நாகர்கோவிலில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கியவாறு ஆபத்தான நிலையில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தானியங்கி கதவுகளுடன் புதிய பேருந்துகள் நாகர்கோவில் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து டதி பள்ளி சந்திப்புக்கு பெயர்ந்து தொங்கிய தானியங்கி கதவுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடசேரி பேருந்து நிலையம் நோக்கி சென்ற அந்த அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டு பகுதியில் உள்ள தானியங்கி கதவின் மேல்பகுதி உடைந்து, கீழ்பகுதியில் மட்டும் சிறிது பிடிமானத்தோடு
தொங்கிய நிலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. இதைப்பார்த்து சாலையோரம் செல்லும் பயணிகள் அச்சத்துடன் ஒதுங்கினர். வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் விலகி சென்றனர். கதவு உடைந்து தொங்கிய நிலையில் பயணிகளுடன் பேருந்தை நிறுத்தாமல் அதன் ஓட்டுநர் இயக்கி செல்கிறார். ஆபத்தான நிலையில் இயக்கப்பட்ட இந்த பேருந்தால் அரச பேருந்து சேவை குறித்து காட்டமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கதவுகள் உடைந்த நிலையில் உள்ள பேருந்துகளை டெப்போவில் இருந்து புறப்படும்போதே சோதித்து அவற்றை இயக்காமல் தரமுள்ள பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.