

மதுரை: இந்தியாவில் சிறுபான்மையினர் மீது சங்பரிவார் இயக்கங்கள் வெறுப்பை விதைக்கின்றன என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை, கேகேநகரில் உள்ள நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கில், மக்கள் நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் இன்று மதநல்லிணக்க மாநாடு நடந்தது.
இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திருப்பரங்குன்றத்தில் இந்த மாநாட்டை நடத்த அனுமதி கேட்கவில்லை. மதுரை மாநகருக்குள் நடத்த அனுமதி கேட்டும் போலீசார் கொடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மத நல்லிணக்கத்தை விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடந்தும், முதல்வர் இருந்தும் அனுமதி வழங்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு முதல்வர் மதவாத சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதுரை மாநகர காவல்துறை மற்றும் ஆட்சி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
எங்களை போன்ற சக்திகளை ஊக்கப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை. ஒவ்வொருக்கும் அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையில் நாம் தலையிடவில்லை, அதனை பின்பற்றினால் மதநல்லிணக்கம் துளிர்க்கும். அதை புரிந்து கொள்ளத்தான் இந்த மாநாடு. நாம் இந்து சமூகத்தை விமர்சிக்கிறோம் எனக் கூறுகிறார்கள். இந்து மத நம்பிக்கை வேறு, இந்து மத நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு, மத குருமார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். மதத்தை கையில் எடுத்து மதத்திற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சனை எழுகிறது. இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டியது இந்து மதப்பற்றாளர்கள், குருக்கள், மதம் சார்ந்தவர்கள்தான்.
சங்கராசாரியார்கள் பாஜகவை கண்டிக்காமல் இருக்கிறார்கள். இந்து மக்களிடம் இஸ்லாம், கிறிஸ்தவம் அந்நிய மதம் என வேற்றுமை படுத்துகிறார்கள், சிறுபான்மை மதத்தினர் மீது வெறுப்பை விதைக்கிறார்கள். இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள், அதில் புரதச் சத்து இருக்கிறது என மக்கள் அதிகளவில் மாட்டு இறைச்சி எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கே அதை வைத்து சங்பரிவார் கும்பல் அரசியல் செய்கிறார்கள். நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வின் அடிப்படையில் சுதந்திர போரில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம். ஆனால் இங்கே பாஜக கிறிஸ்தவர், இஸ்லாம் என பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார்கள்.
இந்துக்கள் இடையே இருக்கும் பிரச்சினைகளை பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்றாவது தடுத்ததுண்டா? இந்துக்கள் அனைவரையும் கோவில் கருவறைக்கு அழைத்துச் செல்ல முன் வந்ததுண்டா? ஓட்டுக்காக மட்டுமே இந்துவாக இருக்க வேண்டுமென கூறுகின்றனர். மண்டைக்காடு கலவரம் வெடித்தது வெறுப்பு அரசியலால் தான். ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என எந்த தலித் தலைவர்களாவது எதிர்த்தார்களா?
மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக விபிசிங் ஆட்சியை கவிழ்த்த பாஜகவினருக்கு ஆதரவு கொடுக்க முடிகிறது. ஓபிசி மாணவர்களும் இந்துக்கள் தானே. அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது என பாஜகவினர் வன்முறை கட்டவிழ்த்துவிட்டார்கள். அதேபோல் பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டையும் ஒரே நாளில் கொண்டு வந்து, ஓபிசி பிரிவினருக்கு துரோகம் செய்ததும் பாஜகதான் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசுக்கு ஆதரவாக, எதிராக செயல்படும் பிரிவுகளும் உண்டு. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எந்த மேடையிலும் முன்னால் இருக்க மாட்டார்கள். ஆனால், அதிகார வர்க்கத்தில் உள்ள டாக்டர்கள், சினிமா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்து மூளைச் சலவை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும் இதை செய்து அதிகாரிகளையும் மாற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது மதுரையில் நடந்த பிரச்சினையாகச் சொல்லவில்லை. நாடு முழுவதும் நடக்கிறது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்