''எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்களிடம் விட்டுவிட வேண்டும்'' - மகாராஷ்டிர ஆளுநர் அறிவுறுத்தல்

''எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்களிடம் விட்டுவிட வேண்டும்'' - மகாராஷ்டிர ஆளுநர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கோவை: "மொழி வேண்டாம், என்று சொல்வதே அரசியல் தான். எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டு விட வேண்டும்" என மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது: ''முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளேன். மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். தேசிய உணர்வு மட்டும் தான் இந்திய தேசத்தையும் தமிழகத்தின் நலனையும் காக்கும்.

தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைத் தான் புதிய தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். எந்த மொழியும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் திணிக்கப்படவில்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்க போராட்டம் நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. மக்களவை தொகுதி வரையறை பணி மேற்கொள்ளும் போது தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என மத்திய அமைச்சர்கள் தெரிவித்த பின்னரும் அதை வைத்து அரசியல் செய்யப்படுகிறது.

இல்லாத ஒன்றை வைத்து அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. வட மாநிலத்தவர்கள் தமிழ் வேண்டுமென்றால் அவர்களுக்கு கற்றுத் தரப்படும்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. போதை பொருட்கள் பயன்பாடுதான் இதற்கு அடிப்படை காரணம். எனவே அதற்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மொழி வேண்டாம், என்று சொல்வதே அரசியல் தான். எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டு விட வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in