Published : 09 Mar 2025 04:18 PM
Last Updated : 09 Mar 2025 04:18 PM
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10-வது நாளில், தாய் கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி(21). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நிறை மாத கர்ப்பிணியான எலிசபெத் ராணி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக கடந்த 26-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 27-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற போது வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்ததைக் கண்டு அவரது தாய் ஜெயாவதி, அங்கிருந்த மற்றவர்கள் உதவியுடன் அவரை மீட்டுள்ளார்.
பின்னர் எலிசபெத் ராணி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். எலிசபெத் ராணியின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எலிசபெத் ராணி இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார். இவர் நர்சிங் படிப்பு முடித்துள்ளார். அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10-வது நாளில் தாய் கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்த போது, உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே இறப்புக்கான காரணம் குறித்து கூற முடியும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT