Published : 09 Mar 2025 01:52 PM
Last Updated : 09 Mar 2025 01:52 PM
சென்னை: திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயருக்கு பதிலாக, திருத்தணி நகராட்சி நிர்வாகம் வேறு பெயர் மாற்றம் செய்வதற்கு முயற்சிப்பது ஏன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மா.பொ.சி சாலையில் காமராஜர் காய்கறி மார்க்கெட் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பழுதடைந்த காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள இந்த மார்க்கெட்டை புனரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக நவீன முறையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு பணிகள் தற்போது முடிவடைந்தன.
திறப்பு விழாவை எதிர்நோக்கி இருக்கும் இந்த மார்க்கெட்டிற்கு மீண்டும் பழைய பெயரான பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் என்று தான் பெயர் சூட்டப்பட வேண்டும். ஆனால் திருத்தணி நகராட்சி நிர்வாகம் வேறு பெயர் மாற்றம் செய்வதற்கு முயற்சிப்பது ஏன் என்று புரியவில்லை. மேலும் இச்செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
தமிழகத்தில் ஒன்பது ஆண்டு காலம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்த காலத்தில் ஏராளமான அரசு பள்ளிகளை பல்வேறு கிராமங்களில் துவக்கி கல்வி புரட்சியை ஏற்படுத்தியும், புதிது புதிதாக அணைகள் கட்டி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றியவர் பெருந்தலைவர் காமராஜர். எனவே அவரது பெயரை தான் மீண்டும் சூட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் சென்னையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம் முன்பு விரைவில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காமராஜர் காய்கறி மார்க்கெட் எனும் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று மாற்ற திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT