

பெண் பாதுகாப்பு குறித்து பாஜக அறிவுறுத்தலின் பேரில் அதிமுக, தவெக உள்ளிட்டோர் அறிக்கை வெளியிடுவதாக சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் பெண்கள் நலன், பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, கல்வி ஆகியவற்றை முன்னிறுத்தி கவனமாக முதல்வர் ஸ்டாலின் செயல் படுகிறார். இது நிறைய பேருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பெண்களிடையே முதல்வருக்கு கிடைத்த நற்பெயரை, பேராதரவை தாங்கி கொள்ள முடியாமல் அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினர். ஆனால் அவர்கள் வெற்றியடையவில்லை. இதனால், பெண்கள் பாதுகாப்பு என்பதை கையில் எடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் பச்சை பொய்யை கூறி வருகின்றன.
இது பாஜகவின் குறிக்கோள். அதிமுக, தவெக போன்றோர் அவர்கள் கேட்டதற்கேற்ப அறிக்கை வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்புபோல அறிக்கை கொடுத்து விடுகின்றனர். திமுக அரசு பெண்களை ஏமாற்றியது போல சிலர் சொல் கின்றனர். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மகளிர் உரிமைத் தொகை மூலம் 1.14 லட்சம் பெண்கள், சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி மூலம் 15.88 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பை பொருத்தவரை சமரசத்துக்கு இடம் தராத வகையில் முதல்வர் ஆட்சி நடத்துகிறார். விழிப்புணர்வு கிடைத்ததால் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் அதிகளவு வெளி வருகிறது.
முதல்வர் மீது நம்பிக்கை வைத்து புகார் அளிக்கின்றனர். அரசும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது. குற்றச் செயல்களை வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்கிறோம். கடந்த ஆட்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே போராட வேண்டியிருந்தது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் குறித்து தவெக தலைவர் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களிடம் அவர் கேட்டறிய வேண்டும். திமுக ஆட்சியின் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு கூறி, அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பலாம் என நினைப்பவர்கள் முகத்தில் மக்கள் கரி பூசுவார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.