Published : 09 Mar 2025 09:28 AM
Last Updated : 09 Mar 2025 09:28 AM
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவது தொடர்பான சொற்பொழிவு நடத்தும் விவகாரம் சர்ச்சையானதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான சொற்பொழிவு இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவது எப்படி, இந்த மார்க்கம் ஏன் தேவை ஆகிய தலைப்புகளில் வரும் மார்ச் 14-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடத்தப்படவிருந்த இந்நிகழ்வில் பொறியாளர் கே.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். நிகழ்ச்சியை துறையின் தலைவர் (பொறுப்பு) ஜே.சவுந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மதத்தை பரப்புவது குறித்த கருத்தரங்கம் நடத்தப்படுவது மாணவர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதுதவிர நிகழ்ச்சி தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் விவகாரம் சர்ச்சையானது.
இதற்கு விளக்கம் அளித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை. ஆளுநரின் தனிச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், “பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவை நடத்துவதற்கு பல்கலைக்கழகத்திடம் முறையான அனுமதி பெறப்படவில்லை. எனவே, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நிர்வாக காரணங்களுக்காக சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ரத்து செய்யப்படுவதாக தொல்லியல் துறை தலைவர் சவுந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டு செய்ததற்கான நோக்கம் தொடர்பான விளக்கத்தை கடிதம் மூலமாக பேராசிரியர் சவுந்திரராஜன், பல்கலைக்கழக பதிவாளருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT