Published : 09 Mar 2025 09:30 AM
Last Updated : 09 Mar 2025 09:30 AM

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக சார்பில் உலக மகளிர் தினவிழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக மகளிர் தினம் கொண்டாடும் சூழலில், தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவுகிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக வழங்க வேண்டுமென தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் அதுபற்றி நாம் அதிகம் பேச தேவையில்லை. அதேநேரம் மத்திய அரசு தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் தேமுதிக அதை கடுமையாக எதிர்க்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து தமிழக மக்களை காப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பிரேமலதாவிடம், மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x