

உலக மகளிர் தினத்தையொட்டி, ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அவ்வையார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செய்தார். தொடர்ந்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "எவராலும் வெல்ல முடியாத வகையில் நமது பெண் சக்தி உயர்ந்து வருவதால், வளர்ச்சியடைந்த இந்திய 2047 என்ற நமது தேசிய தொலை நோக்கு இலக்கை பெண்களே வழி நடத்துகிறார்கள், வடிவமைக்கிறார்கள்.
தமிழகத்தில், குடிநீர், சமையல் எரிவாயு, முழுமையான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிணையில்லா முத்ரா கடன் போன்ற திட்டங்கள், கிராமப் புற மக்களின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்பு வழங்கி வருவதை நாம் பெருமையுடன் பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி, தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இன்னும் இன்னும் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை வழங்குவதாக மகளிர் தினம் அமைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண் சரிநிகர் எனப் பெண்கள் சாதித்து விட்டார்கள். ஆனால், ஆணாதிக்க மனப்பான்மை மறையும் போது தான் இந்த வளர்ச்சி சிறப்பு பெறும்; பெண்களுக்கு எதிரான வன்முறை எண்ணம் முடிவுக்கு வரும். அத்தகைய சிந்தனை வளர்ச்சியை எட்டுவோம். மகளிரின் உரிமையை உறுதி செய்வதை உங்கள் சகோதரனான இந்த முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்றும் தொடரும். மகளிர் உயர மாநிலம் உயரும்.
துணை முதல்வர் உதயநிதி: மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது. பல்வேறு தளங்களில் பெண்களின் தற்சார்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம். அதனை, பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வழியில், பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற பெண்கள் நலத் திட்டங்கள் மூலம் நம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பெண்கள் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைப்போம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும் உறுதி ஏற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பெண்கள் விரும்பும் உலகை உருவாக்க, அவர்கள் எண்ணங்களும் செயல்களும் புதிய பாதைகளை உருவாக்கட்டும்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி: உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு உரிமையானவற்றுக்கு போராடும் வகையில் இருக்கக் கூடாது. நாம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிலையிலும் நம்மையே குற்றவாளியாக அடையாளப்படுத்துகின்றனர். நம்மை உயர்த்துவது போல நடிக்கின்றனர். ஏனென்றால் நம்மை சமமாக பார்க்கும் துணிவு அவர்களுக்கு கிடையாது. நமக்கு வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை. நமது இருப்பு குறித்து விவாதமற்ற ஒரு உலகமே நமக்கு தேவை.
விசிக தலைவர் திருமாவளவன்: பாலின ஆதிக்கமற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் தனியாக செயல்படுத்த வேண்டும்
ஐஜேகே தலைவர் ரவி பச்ச முத்து: நம் உறவின் அனைத்து பரிணாமங்களிலும் நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் பெண்ணினத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.