

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் நாளை தொடங்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கூட்டத் தொடர் நாளை (மார்ச் 10) தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
மும்மொழி கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தென்மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக அல்லாத மற்ற கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்துக்கு நிதி தராதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் மத்திய அரசிடம் தமிழக அரசு போராடி வருகிறது.
இந்த பிரச்சினைகளை நாடாளுமன்ற அவைகளில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.