

கோவை / மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாக நடத்தபத்படும் கையெழுத்து இயக்கத்துக்கு அதிக ஆதரவு உள்ளது. ஆனால், கையெழுத்து இயக்கம் நடத்துவோரை கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்முறையாக தமிழகத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் மையத்துக்கு ராஜாத்திய சோழனின் பெயர் சூட்டியுள்ளார்.
மத்திய அரசு தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் அதற்கான வாய்ப்பு இல்லை. பணம் இல்லாதவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நவீனத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ரயில்கள், பொது இடங்களில் பாதுகாப்பு இல்லை.
மீனவர்களைப் பாதுகாக்க புதிய அமைச்சகம் உருவாக்கி, ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று இணை அமைச்சர் எல்.முருகன், அங்கு வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "‘ஊழல் நடப்பதால்தான் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது. இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே சோதனை நடைபெறுகிறது. அப்படியானால் எந்த அளவுக்கு சட்ட விரோதமான காரியங்கள், விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அமலாக்கத் துறையினரின் இந்த சோதனைகள், திமுக அரசு ஊழல் மிகுந்து இருப்பதையே காட்டுகிறது’’ என்றார்.