“ஜனநாயகம், கூட்டாட்சிக்காக தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்” - ஸ்டாலினுக்கு கமல் புகழாரம்

சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன்
சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன்
Updated on
1 min read

சென்னை: “முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு மட்டுமா நல்லது செய்கிறார்? மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போது, இந்துத்துவ கொள்கைகளையும் இந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போதும் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் ஒன்றாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் ‘முதல்வரின் கலைக்களம்’ எனும் பெயரில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில், கலைத் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை மநீம தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகம் இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முன்னோடியாக திகழ்கிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பட்டியலிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. போதாக்குறைக்கு விளையாட்டிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முன்னெடுப்புகளால் தமிழகத்தின் இளைஞர்கள் பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு மட்டுமா நல்லது செய்கிறார்? மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போது, இந்துத்துவ கொள்கைகளையும் இந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போதும் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் ஒன்றாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்.” என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in