Published : 08 Mar 2025 06:18 AM
Last Updated : 08 Mar 2025 06:18 AM

‘தறி’ கைத்தறி புடவைகள் விற்பனை கண்காட்சி: ரூ.2,000 முதல் ரூ.5 லட்சம் மதிப்பிலான புடவைகள் விற்பனை

இந்திய கைவினை கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறி புடவைகள் விற்பனை கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புடவைகளை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பெண்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: இந்திய கைவினைக் கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறிப் புடவைகள் விற்பனைக் கண்காட்சி நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் விலையிலான புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நெசவாளர்களுக்கு உதவுவதற்காக `தறி' என்ற பெயரில் கைத்தறி புடவைகள் விற்பனை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஓட்டலில் நேற்று தொடங்கிய இந்த விற்பனைக் கண்காட்சி இன்றுடன் (8-ம் தேதி) நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த விற்பனை நடைபெறும்.

இதில் குஜராத், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 31 கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்று அவர்கள் தயாரித்த கைத்தறி புடவைகள், துணிகள், துப்பட்டாக்கள் ஆகியவற்றை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

இக்கண்காட்சியில், எரிஸ்ரீ அகிம்சா பட்டுப் புடவைகள் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.56 ஆயிரம் வரையிலான விலையில் இடம் பெற்றுள்ளது. குஜராத்தின் புஜோத்தி புடவைகள் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரம் வரையிலும், கேரளாவின் வேதிகா என்ற கைத்தறி புடவைகள் மற்றும் வேட்டிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், டெல்லியின் பிரசித்தி பெற்ற கோட்டா டிசைனர் பட்டு, பனாரஸ் மற்றும் காட்டன் புடவைகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தெலங்கானா மாநிலத்திலிருந்து விற்பனைக்கு வந்துள்ள ரஜினி எம்ப்ராய்டரி புடவைகள் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும், வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள நீலாம்பரி பனாரஸ் பட்டு புடவைகள் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும், காட்டன் புடவைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், குஜராத்தின் புகழ் பெற்ற பதன் பட்டோலா புடவைகள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலையில் இடம் பெற்றுள்ளது. இப்புடவை இருபுறமும் கட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை தவிர பல்வேறு ரக புடவைகள் இந்த விற்பனை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், இந்திய கைவினை கவுன்சில் நடத்தும் கமலா அங்காடி சார்பில், பரிசுப் பொருட்கள், பைகள், பொம்மைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ.100 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான கைவினைப் பொருட்கள் இந்த விற்பனைக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x