Published : 08 Mar 2025 06:12 AM
Last Updated : 08 Mar 2025 06:12 AM
சென்னை: சென்னையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக காவல் உதவி ‘க்யூ ஆர்’ குறியீட்டை ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு க்யூ ஆர் குறியீடு அடிப்படையிலான அவசரகால சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78 ஆயிரம் ஆட்டோக்கள் தனியார் செல்போன் செயலிகள் மூலமாக இயங்கும் வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல்கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு 88,859 தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான க்யூஆர் குறியீட்டை உருவாக்கியுள்ளது.
இந்த க்யூஆர் குறியீடு ஆட்டோ மற்றும் வாடகைக் கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், ‘எஸ்ஓஎஸ்’ பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இதன்மூலம் வாகனத்தின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை அழைத்து உடனடி உதவியை உறுதிசெய்யும் வசதியும் இதில் உள்ளது.
இப்புதிய க்யூஆர் குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரியவரும். குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின்போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்துக்கு உதவி கிடைக்கும் வசதியும் உள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையும் தனியார் செல்போன் செயலி வாகன சேவை நிறுவனங்களும் இணைந்து, தங்கள் அவசர எச்சரிக்கைகளை சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கிறது. இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பயன்பாடுகள் மூலம் செய்யப்படும் எந்தவொரு எஸ்ஓஎஸ் அழைப்பும் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக அனுப்பப்படும்.
இதனால் காவல்துறை அதிகாரிகள் பயணிகளின் வேண்டுகோளின்பேரில் பயணத்தின் நிகழ்நேரத்தை கண்காணிக்க முடியும். அவசரநிலை ஏற்பட்டால், வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும். பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்துக்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய க்யூ ஆர் குறியீடு உறுதி செய்கிறது. இதன்மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும்.
தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு இந்த பிரத்யேக ‘க்யூஆர்’ குறியீடுகளை வழங்கியதுடன், ஆட்டோவில் ஏறி குறியீடு ஒட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், காவல் ஆணையர் ஆ.அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவல் ஆணையர் எச்சரிக்கை: வாகனங்களில் செல்லும்போது, பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டால், அந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதில் உள்ள அவசர உதவியை தொடர்பு கொண்டால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும். அந்த பயணியின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். வாகன சோதனையின்போது, வாடகை வாகனத்தில் இந்த க்யூ ஆர் கோடு கிழிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT