தவெகவின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: வேட்டி, சட்டை குல்லாவுடன் வந்தார் விஜய்

தவெகவின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: வேட்டி, சட்டை குல்லாவுடன் வந்தார் விஜய்
Updated on
1 min read

சென்னை: த.வெ.க கட்சி தொடங்கப்பட்ட பின் முதல்முறையாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொழுகைக்காக தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு இஃப்தார் நோன்பை தொடங்கி வைத்தார். ஒருநாள் முழுவதும் நோன்பு இருந்து, தொழுகையில் ஈடுபட்டார். இஸ்லாமியர்களை போல தலையில் குல்லா, வெள்ளை சட்டை, வேட்டி அவர் அணிந்திருந்தார்.

தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகிகளும் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் விருந்தை விஜய் எடுத்து கொண்டார்.

நிகழ்ச்சியில் விஜய் பேசும் போது, “மாமனிதர் நபிகள் நாயகத்தினுடைய வாழ்க்கையின்படி மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றி வாழும் நீங்கள், என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி. மிக்க நன்றி” என்று தெரிவித்தார். இஃப்தார் விருந்தில் நோன்பு கஞ்சியுடன் 2 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சமோசா, உலர் பழங்கள் வழங்கப்பட்டன.

பெருந்திரளான மக்கள் சாலைகளில் குவிந்திருந்தால் ராயப் பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சியையொட்டி மைதானத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட் டிருந்த நிலையிலும், விஜய்யை காண்பதற்காக குவிந்திருந்த மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டி குதித்து அரங்குக்குள் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in