

டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான குடோன், ஆலைகளில் 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில், நிர்ணயித்த அளவைவிட அதிக அளவில் மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டப்படுவதாகவும், அதை கணக்கில் காட்டாமல், தனியார் மது உற்பத்தி நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், சென்னை, கரூர், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். ஒருசில இடங்களில் சோதனை முடிந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை, விழுப்புரத்தில் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், தியாகராய நகரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லரீஸ் மதுபான நிறுவனம், அக்கார்டு ஓட்டல், ஆயிரம்விளக்கில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவனம், தியாகராய நகரில் உள்ள கால்ஸ் மதுபான நிறுவனம், சிவா டிஸ்டில்லரிஸ் நிறுவனம், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான நிறுவனம் ஆகிய இடங்களில் நேற்றும் சோதனை நடந்தது.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் தனியார் மதுபான ஆலை, விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஎம் நிறுவன மதுபான ஆலை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் நிறுவன மதுபான ஆலையில் நேற்றும் சோதனை நீடித்தது.
சென்னை, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் 2-வது நாளாக சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, மதுபான விற்பனை, வரவு - செலவு விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.