

தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலக்குழுவுக்கு நீட்டிப்பு அளிக்காதது ஏன் என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி.லட்சுமிபிரியா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர்களின் நலனை பேணவும், அவர்களுக்கான திட்டங்களை கண்காணிக்கவும், ஆலோசணை வழங்கவும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் ஒருமுறை நலக்குழு மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இறுதியாக 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு திருத்தி அமைக்கப்பட்டு 2020 மார்ச் வரை செயல்பட்டு முடிவுற்றது.
இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் என்ற புதிய அமைப்பு ஒற்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உருவாக்கப்பட்டது.
அதனால், ஏற்கெனவே செயல்பட்டு வந்த மாநில அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவுக்கு நீட்டிப்பு வழங்க அவசியம் எழவில்லை. தற்போது இந்த ஆணையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனைப் பேணியும் கண்காணித்து, ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை வழங்கியும் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.